About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Saturday, January 16, 2010

கண்ணப்ப நாயனார் 2

“இறைவா புலியும் சிங்கமும்,கரடியும் யானையும் அலையும் இடத்திலே இப்படி தனியாக இருக்கிறாயே ? ஐயோ எப்படி நான் உங்களை விட்டு பிரிந்து போவேன்? உனக்கு இறைச்சி கொண்டு வருபவரும் யாருமில்லையே ? இனிமேல் தினமும் நான் இறைச்சி தருகிறேன் “என்று யோசிப்பார். பிரிவார்.

திரும்பவும் சென்று கட்டித் தழுவுவார் ஒரு பசுவினை விட்டு பிரியும் கன்றுக் குட்டியைப் போல் தவிப்பார். மிகவும் கஷ்டப்பட்டு மலையை விட்டு இறங்குவார் பொன் முதலி ஆற்றை கடந்தார்.

அங்கே காடன் ‘ஏன் இத்தனை நேரம்’ என்று கேட்க அதற்கு நாணன் குடுமிதேவரை கண்டதும் உடும்பைப் போலே கட்டி அணைத்துக் கொண்டான். திண்ணன்.

அவருக்கு தின்ன இறைச்சி கொடுக்கவே வந்துள்ளான் . நமது குலத்தன்மையை விட்டு விட்டான் அந்த தேவனுக்கே அடிமையாகி விட்டான்.

காடனும் "என்ன காரியம் செய்தாய்? என்று வினவ திண்ணனோ இதையெல்லாம் கவனிக்காமல் பன்றியை தீயில் வதக்கி சுட்டு பதமாக்கி சுவை பார்த்து அதிலும் நல்ல‌சுவையானவறறை எடுத்து வைத்தான்.மற்றதை எல்லாம் கீழே எறிகின்றான்
நல்ல பசியிருந்தும் அவனும் தின்னாமல் நமக்கும் கொடுக்காமல் இப்படி கீழே எறிகின்றானே என்று இருவரும் மிகவும் வருத்தப்பட்டார்கள்
. இவன் ஏதோ மயக்கத்தில் இருக்கிறான். இவன் தந்தை நாகனிடம் போய் சொலலி அழைத்து வருவோம். என்று சென்றனர்.

ஊனமுதை எடுத்து கொண்டு ஆற்றில் நல்ல நீரை வாயில் எடுத்துக் கொண்டு மலர்களை கொய்து தலைமயிரில் செருகி விரைவுடன் மலை ஏறினார்.

ஏற்கெனவே இருந்த மலரை மாற்றி வாயில் இருந்த நீரை உமிழ்ந்தார். தலையிலிருந்த மலர்களை வைத்தார். சுவை பார்த்து கொண்டு வ்ந்த இறைச்சியை உண்பதற்கு வைத்தார்/கொடிய விலங்கினால் துன்பம் நேராமல் இருக்க காவல் காத்தார்.பின்பு விடிந்ததும் சென்றார். மறு நாள் சிவாகம நெறிப்படி காளத்தியப்பரை வழிபாடு செய்யும்சிவ கோச்சாரியார் நீராடி நீர் , அமுது, மலர் கொண்டு வந்து இறைச்சியும் எலும்பும் கண்டு நடு நடுங்கி ஓடினார். என்ன இது? யார் இப்படி செய்தனர்? என்று எல்லாவற்றையும் அ கற்றி ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு வந்தார். மீண்டும் பூஜை செய்துவிட்டு விடை பெற்றார். திண்ணனோ மறு நாள் மீண்டும் இறைச்சி கொண்டு வந்தார்.ஐயனே இது நேற்றையதை விட இன்னும் சுவையானது. உண்பாயாக.என்று வேண்டுகிறார்.

இப்படியாக பகலில் வேட்டையாடி இர வில் காவல் காத்து வர சிவகோசாரியரோ அவர் சென்ற பின்பு வந்து சுத்தப்படுத்தி அபிஷேகம் செய்வார். நாகனும் தேவராட்டியும் இதையறிந்து மிகவருந்தி அவரைக் காண காளத்தி வருகிறார்.திண்ணன் இவையெல்லாம் கவனிக்கவே இல்லை. நான்கைந்து நாட்கள் இப்படி சென்றன. உண்மையிலேயே திண்ணன் அந்த இறை மயக்கத்திலேயே இருந்த்தனால் கவனிக்கவே இல்லை. மிகவும் வருத்திய சிவகோச்சாரியார் கனவில் சிவபெருமான் தோன்றி "என்னை வந்துபூசிப்பவன் சாதாரண வேடன் அல்ல. அவன் வடிவே அன்பு மயம் அவன் செயலே எனக்கு இனிமை" ":அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையரியும் அறிவென்றும் அவனுடைய செயலெ ல்லாம் நமக்கினியவாம் என்றும் " என்கிறார். மேலும் இறைவன் சொல்கிறார். அவன் வாயிலிருந்து உமிழும் உமிழ் நீரானது கங்கை நீரினும் புனிதமானது நாளை ஒருபுறமாக நின்று நடப்பதை கவனி என்று சொல்லி மறைந்தார். சிவகோசரியார் கோவிலில் பின்புறம் ஒளிந்திருக்க திண்ணன் வரும்போடு சிலையிலிருந்து ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழியத்தொடங் கியது. திண்ணனோ இதைக கண்டதும் ஐயோ என்று அலறி கீழே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.வாயிலிருந்த நீர் கீழே சிந்த மலர்களோ சிதறின. சிறிது நேரம் கழித்து மீண்டும் கண் விழித்து எழுந்ததும் உதிரத்தைக் கண்டார். பிறகு அதை துடைத்து விட்டார். துடைக்க துடைக்க உதிரமானது வழிந்துக் கொண்டே இருந்த்து. பிறகு கோபம் வந்து வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு "யாரிதைச் செய்தது? புலியோ,அன்றி சிங்கமோ அல்லது வேறு யாரேனும் வேடரோ ? என்று வெளியே சென்று பார்த்து மீண்டும் வந்து ஐயோ என் செய்வேன்? எப்படி இந்த் உதிரத்தை நிறுத்துவது? என்று அவரது பாதத்தில் வீழ்ந்தார்.கண்ணீர் விட்டார். காட்டிற்க்குள் ஓடிச் சென்று மருந்து மூலிகைகளை கொண்டு வந்து பிழிந்தார். "ஊணுக்கு ஊண் உற்ற நோய் தீரும் என்ற பழமொழி நினைவுக்கு வர "எனது கண்ணை அப்பினால் என் தந்தையின் கண்ணிலிருந்து வழியும் உதிரமானது நிற்கும் என்று நினைத்து வேகமாக எதைப் பற்றியும் யோசியாமல் வில்லை எடுத்து தனது வலது கண்ணை தோண்டி எடுத்துஅப்பினார். குருதியும் நின்றது.அதை இன்னொரு கண்ணின் மூலமாக‌ கண்டார். உடனே குதித்தார். கூத்தாடினார். அன்பின் மிகுதியால் தன் கண்ணின் வலிகூட தெரியாமல் அப்படியொரு ஆனந்தப் பட்டார்.: உடனே இறைவனின் மறு கண்ணிலிருந்தும் குருதி உதிரத் தொடங்கியது. இம்முறை அவர் கவலைக் கொள்ளவில்லை.
அவருக்குத்தான் வழி தெரிந்து விட்டதே? இன்னொரு கண்தான் இருக்கிறதே அதைக் கொடுத்தால் உதிரம் நிற்குமல்லவா?என்று நினைத்தார். பிறகு அடடா நமது கண்ணை எடுத்ததும் இறைவனின் கண் இருக்குமிடம் நம‌க்கு தெரியாமல்போய் விடுமே என்று நினைத்து தனது இடது காலை எடுத்து இறைவனின் கண்மீது வைத்தபடி கணையை எடுத்து தனது இனனொரு கண்ணையும் குத்தப் போகும் போது " நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப"என்று கூறி இறைவன் தடுத்தாட்கொண்டார்.
எனது வலது புறத்தில் என்றென்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பாய் என்றார். . இத்தனையும் ஒளிந்திருந்தபடி சிவகோசாரியார் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தார்.


====================================================================================
இது இறைவன் சிவகோச்சாரியாருக்காக மட்டும் நடத்திய நாடகமா? அல்லது மக்களுக்காகவா? என்று யாருக்குத் தெரியும் ? . ஆனாலும் காலம் கடந்து நிற்கும் இந்த கதையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது அவசியம் . ஏனெனில் அப்பர், சுந்தரர் ,திருஞான சம்மந்தர் ,மாணிக்கவாசகர் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் நடந்தது.அவர்களெல்லோரும் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடியுள்ளனரென்றால் எத்தகு பெருமை வாய்ந்தவர் அவர்

அவர் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்திருப்பவர்கள் எத்துணை பாக்கியம் செய்தவர்கள். என் நண்பர் ஒருவருடன் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்வோம்.. அப்போது அவர் சொல்லுவார்.
”இங்கே பாருங்கள். இத்தனை பெரிய கடலின் உள்ளே எத்தனை பிரம்மாண்டங்கள் உள்ளன ? அதன் இந்த அமைதியான தோற்றத்தை பார்க்கும் போதும், அதற்கு முன் அமர்ந்திருக்கும்போதும் இவ்வளவு பிரம்மாண்டமான இந்த கடலின் முன்னே நாமெல்லாம் எந்த மூலைக்கு?ஆனால் நமது அகங்காரம் எந்த அளவிற்கு இருக்கிறது இல்லையா ? ” என்பார். அதுபோல் நிறைய சமயங்களில் நமக்கு பக்தி மிகவும் அதிகம் என்று எண்ணும் போது நாம் கண்ண‌ப்ப நாயனாரை நினைவு கூர்வது நல்லது. என்னிடம் ஜாதகம் கொண்டு வருபவரிடம் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்களின் ஜாதகத்தை பார்த்ததும் நான் சில சமயம் கோவிலுக்கு விடாமல் செல்லுங்கள் அவரை வழிபடுவதொன்றே வழி என்று சொல்வது வ்ழக்கம். அப்படி ஒருவர் மிகவும் துன்பத்தில் வந்திருந்தார் அவரிடம் சொல்லும் போது அதற்கு அவர் “ நான் நிறைய கோவிலுக்கு செய்திருக்கிறேன். எனக்கு பக்தி மிகவும் அதிகம். ஆனால் அந்த கடவுள் ஏன் தானோ இப்படி சோதிக்கிறான் ” .என்றார். நான் சொன்னேன் கண்ணப்ப நாயனார் கண்ணைப் பிடுங்கிக் கொடுத்தார். அப்படி ஏதாவது நீங்கள் செய்தீர்களா என்ன? என்றேன்.

ஏதோ நமக்கு தெரிந்த நாலு ஸ்லோகங்களையும் நாலு பாடலையும் தெரிந்து கொண்டால் நாம் கடவுளுக்கு நெருக்கமாகவோ சொந்தமாகவோ ஆகி விடமுடியுமா? என்ன?

என்றைக்குமே இறைவனை நெருங்கவே முடியாது. இறைவன் மிகப் பெரியவன் என்ற நினைவு நமக்கு எப்போதுமே இருக்கவேண்டும்.பக்தியில் நமக்கு அகங்காரம் வந்தால் நாம் உடனே இவரை த் தான் நினைவு கொள்ள வேண்டும்.

தூரத்திற்கு தூரமும் அவனே
நெருக்கத்திற்கு நெருக்கமும் அவனே

. ...................சந்திப்போம்

Friday, January 15, 2010

கண்ணப்ப நாயனார் 1

வேடுவனுக்குத் தலைவனவன்
வேதனையில் தானிருந்தான்
காடுமலை சுற்றி வந்து
யானைபுலிக் குட்டியுடன்
ஓடி விளையாடல் காண
ஓர் பிள்ளை யில்லையென்று
நீடு தவம் முற்பிறவி செய்த பலன்
நின்றே யின்று பெற்றனன்‍‍‍‍‍.....

என்று இப்படித்தான் எழுதிகொண்டு போக ஆசை.ஆனாலும் எதுகையிலும் மோனையிலும் எண்ணத்தை சிதற விட்டு, பக்தி இங்கு சிறகடித்துப் போய் விடுமோ என்ற பயம்.

வெண்பா பாடலாம் குழுவினரிடம் சற்று பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து நேரிசை வெண்பாவிலும் இன்னிசை வெண்பாவிலும் விளையாடலாம்..அது வரை எளிய தமிழில்
பக்தி ரசம் பருக என்னோடு வாருங்கள்.
************************************************************************

நாடு பொத்தப்பி
நாகன் தந்தை
தாயோ தத்தை

பிள்ளையொன்று இல்லையென்று எல்லோருங் கூறிட , முருகனை வழிபட்டு தவமாய் தவ‌மிருந்து பெற்ற பிள்ளைதான் திண்ணப்பன். புலிக்குட்டி, முயற்குட்டி, பன்றிக்குட்டிகளுடன் விளையாடி வளர்ந்தான்.

இளமைப் பருவம் வந்தது.வயதோ பதினாறு. தந்தை நாகனோ வில்விழா ஏற்பாடு செய்து மலைப்பகுதி மறவர்கள் சுற்றத்தாரை வரச் செய்து வில்லைப் பிடிக்கசெய்தான். திண்ணனை தலைவனாக்கி தான் ஓய்வு கொண்டான்.


இந்த இடத்தில் ஒரு முக்கிய செய்தி.
சிலர் அறியாத செய்தியாகவும் இருக்கலாம்.
இந்த திண்ணப்பன் தான் முற்பிறப்பில் அர்ஜுனன்.
மகன் அபிமன்யு பதிமூன்றாம் நாளன்று போரில் மாள, மிகவருந்தி, பாசு பதம் வேண்டி சிவபெருமானை நோக்கி
தவம்புரிய, நேரில் இறைவனை கண்டதும் கணையைப்
பற்றிக் கேட்காமல், அன்பெனும் அமைதியைத் தருமாறு
கேட்கலானான்.
அதற்கு இறைவனோ முதலில் பாசுபதத்தை பெற்றுக் கொள்.அளவற்கரிய அன்பையும்,முக்தியையும் அடுத்த பிறவியில் தருவோம் என்றார்.
பன்றியின் காரணமாக உனக்கும் எனக்கும் போர் மூண்டதால் அதே பன்றியின் காரணமாக நீ வந்து என்னைக் கண்டு அருள் பெறுவாய்.என்று வரமளித்தார்.

“வாமன்றேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்
தாமாருலகில் தவமுடையார் ‍-தாமார்க்குள்
காண்டற் கரியராய் காளத்தி யாள்வாரைத்

தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று ”

-----நக்கீரத் தேவர்
(பதினோராந் திருமுறை )



திண்ணன் வேட்டையாட நாணன் ,காடன் என்ற இரு வேடர்களுடன் சென்றான். வழியில் ஒரு பன்றியை கண்டு பின்னால் ஓடி அப்பன்றியைச் சுட்டுக் கொன்று பின்பு அதை சுட்டு சாப்பிட தண்ணீரைத் தேடி காளத்திமலைக்கு வந்தனர்.

அங்குள்ள மலைசாரலில் சென்று குடுமிதேவரைக் கும்பிடலாம் என்று வேடர் கூற திண்ணனும் சென்றான் .இங்கு வரும்போதெல்லாம் மனச்சுமை குறைந்து மகிழ்ச்சி உண்டாகிறதே என்கிறார்.பன்றியை தீ மூட்டி சுட்டுவை என்று காடனிடம் சொல்லி ,காண‌னுடன் மலையேறுகின்றான்
.
மலைமீது ஏறிச் செல்ல செல்ல நாயகனை நெருங்க‌ நெருங்க ஆனந்தம் பொங்குகிறது. இறைவன் குலத்தைப் பார்த்தானா? மனிதர்களாகிய நாம் தான் குலமென்றும் குணமென்றும் காண்கின்றோம்.

“கண்ணுக்கு குலமேது கண்ணா
கருணைக்கு நிறமேது
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
‍‍‍கையில் கொள்பவரெல்லாம் கீழாவார் ”

. என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

.உயர் குலத்தை சேர்ந்த பிராமணனாயினும் சரி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த வேடுவனாயிருந்தாலும் சரி பக்தியெங்குணடோ அங்கு நான் தேடிவருவேன் என்கிறார்.
அவ்வப்போது இறைவன் இவற்றையெல்லாம் எடுத்துக் காண்பிப்பதுண்டு


இறைவன் சம்மந்த்ப்பட்ட அனைத்து நூல்களையும் வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் புராணங்களையும்
நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது.வெறும் தர்க்கங்கள் தான் உண்டாகும். அதனால் நம் நேர விரயமும் வீண் விரோதமும் தான் வளரும். எல்லாவற்றிலும் மறைமுகமாக ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் அக்கால மக்களுக்கேற்ற வகையில் சிலவற்றை சொல்லியிருப்பார்கள்



நேற்று ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார். முருகருக்கு ஏன் இரண்டு மனைவிகள் என்று. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பொதுவாக பதில் சொல்வது கிடையாது.. இருந்தாலும் எப்போதோ சுகி சிவம் அவர்கள் சொனனது நினைவுக்கு வந்தது. இருப்பதிலேயே உயர்ந்த குலத்தை சேர்ந்த தெய்வானையையும் தாழ்ந்த குலத்தில் பிறந்த வள்ளியையும் மணந்து இருவரும் தனக்கு சமமென்று உலகிற்கு எடுத்து காட்டுவதற்காகவேதான். என்றார். இத்துடன் நின்று விடவேண்டும்

எம்பெருமானை கண்டான் திண்ணப்பன்
.கண்களில் நீர் சொரிய சிவபெருமானை
கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்து ஒன்றும் புரியாமல் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு சிலை போல் சிறிது நேரம் நின்றார்.
இங்கே ஒரு விஷயம்
எப்போதோ ஒரு ஹதீஸில் படித்தது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒரு பெரியார் வந்து எந்த துஆ அல்லாவை சென்று சேர்கிற்து

அதற்கு நபிகள் " எந்த துஆ செய்யும் போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ, எந்த து ஆ செய்யும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறதோ அந்த‌ துஆ அல்லாவை சென்று சேர்கிற்து

அதற்கு நபிகள் " எந்த துஆ செய்யும் போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ, எந்த து ஆ செய்யும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறதோ அந்த‌ துஆக்கள் அல்லாவை சென்று சேர்கிறது .என் கிறார்."
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் " ..என்று இதைத் தான் வள்ளுவரும் சொல்கின்றார்.
மீண்டும் இங்கே வருவோம்

திண்ணன் அங்கே இறைவனுக்கு பூவாலும் இலையாலும் அலங்காரம் செய்விக்கப் பட்டு நீரால் அபிஷேகமும் செய்யப்பட்டு இருந்ததை கண்டு யார் இவ்வாறு செய்தது என வின‌வ, அதற்கு காணனோ ' நானும் உன் தந்தையும் ஒரு முறை இங்கே வந்த போது ஒரு பார்ப்பான் வந்து இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறோம்.
அவர்தான் இன்றும் இப்படி செய்திருக்க வேண்டும் "என்றான். அதற்குள் திண்ணனுக்கும் நாமும் இனி இவ்வாறே செய்ய வேண்டும் என்ற ஆவல் வந்தது. பிறகு திடீரென்று "ஐயோ எம்பெருமான் தனிமையில் இருக்கிறாரே பசிக்குமே உணவுக்கு எங்கே போவார்". என்று அழுகின்றார்.

இறைவன் எங்கோ வானத்தில் நமக்கப்பாற்பட்டு தூரத்தில் இருப்பதாக நம்மில் சிலருக்கு நினைப்பு இருக்குமல்லவா?
ஒரு மீனானது நீருக்குள்ளேயே இருந்து கொண்டு நான் தண்ணீரை பார்க்க வேண்டுமே அது எங்கே என்று தேடுவது போலிருக்கிறது. இறைவன் எப்போது ந்ம்மோடே இருக்கிறான் இல்லையா ?
திண்ணனுக்குவெறும் சிலையாக வெறும் கல்லாக இருந்தால் அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமா?

..........சந்திப்போம்

Thursday, January 14, 2010

... கவிதைகள்/பாடல்கள்

கல் மனதை கரைக்கும் கண்கள உந்தன் கண்கள்
கலியுகத்தை காக்கும் கண்கள் உந்தன் கண்கள் (கல் மனதை

நால்வருக்கு ஞானம் தந்து பாட வைத்த கண்கள்
கால் எடுத்து மீராவை ஆடவைத்த கண்கள் (கல் மனதை

தந்தையென வந்து நின்று அன்பு செய்த கண்கள்
சிந்தையினில் தேடுவோரை வம்பு செய்த கண்கள் (கல் மனதை

காணுமிந்த பூமி தனை ஆளவந்த கண்கள்
வேணுமென்ற போது வந்து ஆசி தந்த கண்கள் (கல் மனதை

Wednesday, January 13, 2010

உள்ளே செல்லும் முன்

அன்பு நெஞசங்களே! வணக்கம்.

இணைய தளத்தினுள் இப்படி ஒரு பதிவர் வட்டம் கூட்டமாக கும்மியடித்துக் கொண்டிருப்பது இது காறும் எனக்கு தெரியாமல் இருந்தது.உள்ளே சென்றதும் ஆச்சரியம் தாஙக‌முடியவில்லை.அடேயப்பா எத்தனை எத்தனை கவிஞர்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்கள்,எத்தனை எத்தனை ஆன்மீகவாதிகள்,சோதிடர்கள் ,எத்தனை எத்தனை நாத்திகம் பேசும் அன்பர்கள்,சமையல் குறிப்புகளை அள்ளித் தரும் இல்லத்தரசிகள்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஒன்றுமே புரியவில்லை தலை சுற்றியது தான் மிச்சம்.எனக்கோ பின்னூட்டம் கூட இடத் தெரியாது இப்போதுதான் கற்றுக் கொண்டேன். இதில் என் பஙகுக்கு எதையாவது தரலாமென்றால் எதைப் பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை. சோதிடம் பற்றி எழுதலாமென்றால்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ S.V சுப்பையா போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே உலா வருகிறார்கள். ஆன்மீகம் பற்றி ஏதாவது எழுதலாமென்றால் அதிலும் மதுரையம்பதி, குமரன் போன்றோர் எதிரே தென்படுகிறார்கள். கவிதையோ சொல்லவே வேண்டாம். இவை மூன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.

சில பதிவுகளைப் பார்த்ததும் நாம் ஏதும் எழுத் வேண்டாம் எல்லாவற்றையும் படித்து ரசித்துக் கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆயினும் உள்ளிருந்து ஏதோவொன்று தூண்டிக் கொண்டிருப்பதால் ஆன்மிகத்தில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அது சிறிதளவேனும் ,சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் அதுவே போதுமல்லவா ?

நாகரிகம் என்பது ஒரு நகரத்தை சுற்றி ஏற்படுகிறது. ந‌கரமோ ஒரு நகரைச் சுற்றி உண்டாவது.

நகர் என்றால் கோவில் என்று எப்போதோ கி வா அவர்கள் எழுதியதாக படித்த ஞாபகம்.

அப்படி எனது இல்லத்தைச் சுற்றி ஒரே கோவிலாக அமைந்திருக்கும். வடக்கே எல்லையம்மன் கோவிலும் திருவேட்டீஸ்வரன் கோவிலும்,

கிழக்கே பார்ததசாரதி கோவிலும், கோலமணி அம்மன் கோவிலும், தெற்கே தீர்த்த கபாலீஸ்வரர் கோவிலும், துலுக்கானந்தம்மன் கோவிலும் இவை தவிர நாற்புறமும் மசூதிகளும் முன்னும் பின்னும் கிறித்துவ தேவாலயமும் இருக்கின்றது. எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன் என் இல்லமே ஒரு கோவிலாகத்தான் இருக்கும் . திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்து இறைச் சூழலிலேயே இருப்பதனாலோ என்னவோ இறைவனைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் எழுதத் தோன்றுகிறது. ====

…………….சந்திப்போம்